இந்தியாவில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் 2வது நாள்: மாபெரும் உச்சி மாநாடு முதல் ராஜ்காட் அஞ்சலி வரை
செய்தி முன்னோட்டம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். புது டெல்லியின் பாலம் விமான நிலையத்திற்கு புடின் வந்தடைந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் அங்கு சென்று அவரை ஆரத்தழுவி வரவேற்றார். இதன் மூலம் மோடி நெறிமுறைகளை (Protocol) மீறியதாகக் கூறப்படுகிறது. காரணம், நாட்டின் பிரதமர் பிரதிநிதிகளை வரவேற்க விமனநிலையத்திற்கு என்றும் செல்வதில்லை. புடினை விமானநிலையத்தில் வரவேற்ற பின்னர், அங்கிருந்து பிரதமர் மோடியின் இல்லத்திற்கு இரு தலைவர்களும் ஒரே காரில் ஒன்றாகப் பயணித்தனர். இந்த அரிய பயணத்தின்போது இரு தலைவர்களும் சிரித்துப் பேசிக்கொண்டே சென்ற காட்சிகள் வெளியானது. பிரதமரின் இல்லத்தில், ஜனாதிபதி புடினுக்கு பிரதமர் மோடி அவர்கள் பிரத்யேக தனியார் இரவு விருந்தை அளித்தார்.
இரண்டாம் நாள்
இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இந்திய விஜயத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. மாபெரும் உச்சி மாநாடும் முக்கிய சந்திப்புகளும் இந்த நாளில் இடம்பெறுகின்றன. காலை 11:00 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் புடினுக்கு சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து அவர் மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுவே இரு நாடுகளுக்கும் இடையேயான 23வது வருடாந்திர உச்சி மாநாடாகும். பிற்பகல் 3:40 மணியளவில் ஒரு வணிக நிகழ்வில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 7:00 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து விருந்தில் கலந்துகொள்கிறார். இரவு 9:00 மணிக்கு ஜனாதிபதி புடின் இந்தியாவிலிருந்து புறப்படுகிறார்.