தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி
தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம்.,தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மெடிக்கடா தடுப்பணைக்கு அருகிலுள்ள அம்பத்பள்ளி என்னும் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. அப்போது பேசிய அவர், "தற்போதைய முதல்வர் கே.சந்திரசேகர ராவ், கொள்ளை அடித்ததாக கூறப்படும் பணத்தினை, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் திரும்ப கொடுக்க முடிவு செய்துள்ளது" என்று கூறினார். தொடர்ந்து, "இப்போதைய முதல்வர் செய்த ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பதால் மாதந்தோறும் அவர்களுக்கு ரூ.4000 வரை வழங்கப்படும்" என்று தேர்தல் வாக்குறுதியினை அளித்துள்ளார். இதில் "ரூ.2,500 நேரடியாக பெண்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும்" என்று கூறிய அவர், "மீதமுள்ள தொகையில் ரூ.500க்கு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
மெடிக்கடா தடுப்பணையை ஆய்வு செய்தார் ராகுல் காந்தி
மேலும், ரூ.1,000க்கு, பெண்கள் அரசு பேருந்தில் இலவசமாக தங்கள் பயணத்தினை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளார். தெலங்கானா மக்கள், தங்கள் மாநிலத்தில் நடந்துவரும் ஊழல் ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்து, மக்களுக்கான ஆட்சியினை கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார், ராகுல் காந்தி. பிரதமர் மோடி போல், தான் வெறும் வாக்குறுதி மட்டும் கொடுக்கவில்லை, நிச்சயம் இவை அனைத்தையும், ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துவதாகவும் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். இதனிடையே, மெடிக்கடா தடுப்பணையை ராகுல் காந்தி ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் அவர், அணையின் தூண்கள் தரமற்ற கட்டுமானம் காரணமாக விரிசல் விழுந்து நீரில் மூழ்கி கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து, காலேஸ்வரம் திட்டத்தினை முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களுக்கான ஏடிஎம்-ஆக பயன்படுத்தி வருவதாக கடுமையான விமர்சனத்தினை முன்வைத்துள்ளார்.