
டெல்லியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி ₹23 கோடி இழந்த ஓய்வுபெற்ற வங்கி
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா, டிஜிட்டல் கைது (digital arrest) என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு அதிநவீன இணைய மோசடியில் ₹23 கோடியை இழந்துள்ளார். இந்த மோசடி, ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அதிகாரியாக ஒரு பெண் தன்னைப் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு, அவரது மொபைல் எண் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறியதில் இருந்து தொடங்கியது. இதை அடுத்து, மும்பை காவல்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் எனப் பல போலியான நபர்கள் அவரைத் தொடர்பு கொண்டனர். ஒரு மாதத்திற்கும் மேலாக, இந்த மோசடி கும்பல் தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் நரேஷ் மல்ஹோத்ராவைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
மிரட்டல்
யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டல்
அவர் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது வேறு யாரிடமும் தகவல் தெரிவிக்கவோ கூடாது என்று மிரட்டினர். சட்ட நடவடிக்கைகளுக்குப் பயந்த நரேஷ் மல்ஹோத்ரா, தனது சேமிப்பு கணக்குகளில் இருந்த மொத்தப் பணத்தையும், மோசடி கும்பல் குறிப்பிட்ட பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார். பணத்தை மாற்றிய பிறகு, மோசடி கும்பல் அவரிடம் பேசுவதைத் துண்டித்தது. அதன் பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். முதலில் பயத்தின் காரணமாக புகார் அளிக்கத் தயங்கினார். பின்னர் தேசிய சைபர்கிரைம் போர்ட்டல் (NCRP) மூலம் புகார் அளித்தார்.
டெல்லி காவல்துறை
டெல்லி காவல்துறைக்கு வழக்கு மாற்றம்
இந்த வழக்கு டெல்லி காவல்துறையின் உளவுத்துறை மற்றும் மூலோபாய செயல்பாடுகள் (IFSO) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணையில், மோசடி கும்பல் நாடு முழுவதும் பல கணக்குகளைப் பயன்படுத்தி பணத்தை எடுத்தது தெரியவந்துள்ளது. டெல்லி காவல்துறை இதுவரை ₹12.11 கோடியை முடக்கியுள்ளது. அரசு டிஜிட்டல் கைது உள்ளிட்ட சைபர் கிரைம் மோசடிகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தாலும், வங்கித்துறையில் பணியாற்றிய ஒருவரே இதில் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.