தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு
தமிழ்நாடு-கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள-தமிழக எல்லையில் அமைந்துள்ள ஆனைக்கட்டி மலைப்பகுதிக்கு காரில் பயணம் செய்து சென்றுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து அவர் தனது காரினை அந்த பகுதியில் உள்ள தனியார் சர்வீஸ் சென்டருக்கு சுத்தம் செய்வதற்காக எடுத்து சென்று அங்கேயே விட்டு வந்துள்ளார். அங்கிருந்த பணியாளர்கள் காரினை சுத்தம் செய்கையில் சுமார் 3 அடி நீளமுள்ள பறக்கும் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பறக்கும் பாம்பானது மிகவும் அரிய வகையை சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
லாவகமாக பிடிக்கப்பட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது
இந்நிலையில் காரில் இருந்த பாம்பினை கண்ட ஊழியர்கள் உடனடியாக பாம்பு பிடி வீரரான ரபீஸ் என்பவருக்கு தகவல் அளித்துள்ளார்கள். சம்பவ இடத்திற்கு வந்த ரபீஸ் காரில் சிக்கியிருந்த அந்த அரிய வகை பறக்கும் பாம்பினை லாவகமாக பிடித்துள்ளார். அதன் பின்னர் பிடிபட்ட பாம்பின் மீது செய்யப்பட்ட சோதனையில் அது மலை பகுதிகளில் உள்ள மரங்களில் வாழும் அரிய வகை பறக்கும் பாம்பு என்பது உறுதியானது. கார் உரிமையாளர் ஆனைக்கட்டி மலைப்பகுதிக்கு சென்று வந்துள்ள நிலையில், தவறுதலாக அப்பகுதியில் இருந்த இந்த பாம்பு காரில் விழுந்திருக்க கூடும் என்று கூறப்பட்டது. தொடர்ந்து பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் அடர்ந்த காட்டு பகுதியில் விடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.