Page Loader
மகாத்மா காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலை அருகே நடத்த திட்டம் - ஏற்பாடுகள் தீவிரம்
உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா

மகாத்மா காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலை அருகே நடத்த திட்டம் - ஏற்பாடுகள் தீவிரம்

எழுதியவர் Nivetha P
Jan 06, 2023
06:41 pm

செய்தி முன்னோட்டம்

நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் சென்னை மெரினா அருகே உள்ள காமராஜர் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே விழாவை நடத்துவதே வழக்கம். ஆனால் இம்முறை அப்பகுதியில் மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வருட குடியரசு தின விழாவை எங்கே நடத்துவது குறித்து ஆலோசிக்க பொதுத்துறை செயலாளர் தலைமையில் பொதுப்பணித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் பல துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டது.

போக்குவரத்தில் மாற்றம்

குடியரசு தின நிகழ்ச்சிக்கான ஒத்திகை வரும் 20,22,24 தேதிகளில் நடத்தப்படும் என்று தகவல்

நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்தாண்டு குடியரசு தினத்தை சென்னை மெரினா, விவேகானந்த இல்லம் அருகே நடத்தலாமா அல்லது உழைப்பாளர் சிலை அருகே நடத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, உழைப்பாளர் சிலை அருகே நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதன் படி, குடியரசுதின விழா நிகழ்ச்சிகளை உழைப்பாளர் சிலை அருகே நடத்துவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி எப்பொழுதும் போல, முப்படை, தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அணிவகுப்பு நடக்கும். இதற்கான ஒத்திகை 20, 22, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மெரினா கடற்கரை சாலையில் நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.