காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு
தமிழ்நாடு மாநிலத்தில் காலி மனை பதிவின் பொழுது கள ஆய்வு எதுவும் நடத்தப்படுவதில்லை. இதனால் கட்டிடம் இருந்தும், அந்த நிலம் காலி மனை என கூறி பத்திரப்பதிவு செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் பத்திரப்பதிவு துறைக்கு வருவாய் இழப்பீடும் ஏற்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சார் பதிவாளர், பதிவுத்துறை துணை தலைவர், மாவட்ட பதிவாளர்கள் உள்ளிட்டோருக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்து உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். அதன்படி உத்தரவில், காலிமனை பத்திராபதிவின் பொழுது களஆய்வுகள் குறித்து பல சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது. எனினும், கட்டிடம் இருக்கும் நிலம் காலிமனை என பத்திரப்பதிவு செய்வது குறித்த புகார்கள் தொடர்ந்து எழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
சார்பதிவாளர்கள் மீது கடும் சட்ட ஒழுங்கு நடவடிக்கை பாயும்
மேலும், இதனை தடுக்கும் பொருட்டு பத்திரப்பதிவின் பொழுது இணைக்கப்படும் மற்ற ஆவணங்களுடன் காலி நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். அனைத்து ஆவணதாரர்கள் மற்றும் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இதுகுறித்து அறியும்வகையில் அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டிடம் இருந்தும் களப்பணிகள் உள்ளிட்ட மற்ற ஆய்வுகளையும், ஆவணங்களையும் முறையாக சேகரிக்காமல் பதிவு செய்தால் சார்பதிவாளர்கள் மீது கடும் சட்ட ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் உத்தரவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமர்பிக்கப்பட்டும் முன்பதிவு ஆவணங்களில் கதவு எண், குடிநீர் வாரிய எண், மின்சார இணைப்பு எண், போன்றவை இருந்தால் நிச்சயம் களப்பணி மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.