தமிழகத்தில் நாளை நியாயவிலை கடைகள் வழக்கம்போல் இயங்கும்
செய்தி முன்னோட்டம்
வரும் செப்டம்பர் 15ம்தேதி முதல் தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமை தொகை' திட்டத்தின் படி, மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி அதற்கான விண்ணப்பப்படிவங்கள் பெறும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.
விண்ணப்பங்களை பெறுவதற்கென தனியே சிறப்பு முகாம்களும் நியாயவிலை கடைகளின் அருகேயுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
அதில் அவர், "சில நிர்வாக ரீதியான பணிகள் காரணமாக நாளை(ஜூலை.,30) ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது" என்றும்,
"அதனை ஈடு செய்ய வரும் ஆகஸ்ட் 26ம்தேதி சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விண்ணப்பம்
ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படாது
மேலும், விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்வதினையொட்டி நாளை நியாயவிலை கடைகள் திறக்கப்படும் பட்சத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமை தொகை' திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி தமிழக மகளிர் பயனடையவுள்ளனர் என்று முன்னதாக முதல்வர் கூறிய நிலையில், முதற்கட்ட விண்ணப்ப விநியோகமானது வரும் ஆகஸ்ட் 4ம் தேதியோடு முடிகிறது.
அடுத்தகட்ட விண்ணப்ப விநியோகம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டத்தில் 703 நியாயவிலை கடைகள் கொண்ட 98 வார்டுகளிலும், இரண்டாம் கட்டத்தில் 725 நியாயவிலை கடைகள் கொண்ட 102 வார்டுகளிலும் விண்ணப்ப விநியோகம் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.