சென்னையில் கத்தி முனையில் கடத்தப்பட்ட ராப் இசை கலைஞர்
சென்னை, திருவேற்காடு பகுதிக்கு சென்ற ராப் இசைக்கலைஞரான தேவ் ஆனந்த் கத்திமுனையில் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த இசைக்கலைஞரான இவர், நேற்று(ஜூன்.,21)நுங்கம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் ஹாலில் நடந்த 'வேல்ட் மியூசிக் டே' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சி முடிந்த பிறகு, இவர் தனது 3 நண்பர்களை காரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினார். அவரது கார் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ்-சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது, இருசக்கர வாகனம் ஒன்று கார்மீது மோதியது. இதனையடுத்து, காரிலிருந்த தேவ்'வின் நண்பர் ஒருவர் கீழே இறங்கி வாகனத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்திருக்கிறார். இதனிடையே, அப்பகுதிக்கு மற்றொரு காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 10 பேர் கொண்ட கும்பல் தேவ் ஆனந்தினை கத்திமுனையில் கடத்தியதாக கூறப்படுகிறது.
தேவ் ஆனந்தினை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபாடு
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து தகவல் அளித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தேவ் ஆனந்தின் சகோதரர் நிதி நிறுவனம் ஒன்றினை நடத்தியதில் ரூ.3 கோடி பணத்தினை மோசடி செய்தார் என்பது தெரியவந்தது. அதன் காரணமாகவே, அவர் கடத்தப்பட்டார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கடத்தப்பட்ட தேவ் ஆனந்தே தனது மொபைல் போனில் இருந்து அழைத்து கடத்தியவர்கள் தன்னை நல்ல நிலையில் தான் வைத்துள்ளார்கள் என்னும் தகவலினை அளித்துள்ளார். தற்போது, போலீசார் தனிப்படை அமைத்து தேவ் ஆனந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.