ஜனவரி 17ஆம் தேதி நடக்க இருந்த அயோத்தி ராமர் சிலையின் ஊர்வலம் ரத்து
ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஜனவரி 17ஆம் தேதி நடக்க இருந்த அயோத்தி ராமர் சிலையின் ஊர்வலத்தை ரத்து செய்துள்ளது. வரும் 22ஆம் தேதி நடக்க இருக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக ராமர் சிலையை அயோத்தி மக்களுக்கு காட்டும் நோக்கத்தோடு இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்பட்டிருந்தது. இந்நிலையில், அயோத்தி முழுவதும் நடக்க இருந்த அந்த ஊர்வலம் அதே நாளில்(ஜனவரி 17) ராம ஜென்மபூமி வளாகத்திற்குள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முடிவு
அயோத்தி நகரம் முழுவதும் ராமர் சிலையை எடுத்து சென்றால் கூட்ட நெரிசல்கள் அதிகம் ஏற்படும் என்பதால் அந்த ஊர்வலத்தை ரத்து செய்துள்ளதாக ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகள், காசியின் ஆச்சார்யர்கள் மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகளை சந்தித்து பேசிய பிறகு இந்த முடிவை எடுத்துள்ளனர். அயோத்தி நகரத்திற்குள் புதிய ராமர் சிலையை எடுத்து சென்றால், ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகம் கூடுவார்கள், அதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.