தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: மன்னார்குடியில் 21 செ.மீ மழை பதிவு!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 7 மற்றும் 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (நவம்பர் 6, 2025) காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த சூழலில், இன்றும், நாளையும் (நவம்பர் 7, 8) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக இன்று இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வானிலை
சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் வானிலை முன்னறிவிப்பு
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் COMK தெரிவித்துள்ளதன்படி,"அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை இயல்பு நிலைக்குத் திரும்பும் வகையில் விஷயங்கள் மெதுவாக நடைபெற்று வருகின்றன. அடுத்த சில வாரங்களில் ஏற்படக்கூடிய சீற்றங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம், அதே நேரத்தில் வங்காள விரிகுடாவில் அடுத்த சில நாட்களில் ஒரு குறைந்த தாழ்வு நிலை உருவாகி தீபகற்ப இந்தியாவின் கிழக்குப் பகுதியை படிப்படியாக மீண்டும் நிலைநிறுத்தக்கூடும். அதுவரை காற்று ஒன்றிணைவதால் மாநிலத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தொடரும், தெற்கு தமிழகம் மிகப்பெரிய பயனாளியாக இருக்கும்." சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.