வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் சாத்தியம்: தமிழகத்தில் மழை நிலவரம் என்ன?
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை வலுவிழந்து, தெற்கு கர்நாடக நோக்கி நகர்ந்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும், சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை
அக்டோபர் 29 வரை மழை தொடரும்
தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக வடமேற்கு திசையில் நகர்கிறது. இது இன்று மேலும் வடமேற்கு திசையில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் விளைவாக, தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோரம் நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையும் என கூறப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை அக்டோபர் 29 வரை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.