ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி எதிரொலி - 12ம் தேதி அமைதி போராட்டம்
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார். இதுபெரும் சர்ச்சையானதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக.,எம்.எல்.ஏ.புனரேஷ்மோடி அவமதிப்பு வழக்கினை சூரத் நீதிமன்றத்தில் பதிவுச்செய்திருந்தார். அதன்படி, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று சூரத் நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. மேலும் 30நாட்களுக்குள் ராகுல்காந்தி இத்தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவித்தது. இதனையடுத்து, ராகுல் காந்தி சூரத் நீதிமன்றம் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையினை நிறுத்தி வைக்குமாறு குஜராத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று(ஜூலை.,7)வழங்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தியின் 2ஆண்டு சிறைத்தண்டனையினை நிறுத்திவைக்க மறுப்பு தெரிவித்த குஜராத்நீதிமன்றம், அவரது மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அனைத்து மாநில தலைமையகங்களிலுள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு போராட்டம்
இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில கட்சி தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதம் ஒன்றினை எழுதி அனுப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. அக்கடிதத்தில், "இச்சூழலில் ராகுல் காந்தி தனியே இல்லை என்னும் உண்மையினை நாம் உணரவைக்க வேண்டும். நீதிக்கான போராட்டத்தில் கோடிக்கணக்கான காங்கிரஸ் கட்சியினரும், வேறுசில கட்சிகளின் தொடர்பில் உள்ள கோடிக்கணக்கான மக்களும் அவருடன் இருப்பதை மீண்டும் வலியுறுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கவேண்டிய தருணம் இது" என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர், வரும் ஜூலை 12ம் தேதி அனைத்து மாநில தலைமையகங்களிலுள்ள மகாத்மா காந்தி சிலை முன்னர் பெரியளவிலான ஒரு நாள் அமைதி போராட்டத்தினை நடத்த தகுந்த ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.