குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) தலைமையிலான எதிர்க்கட்சிகள் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஒரு தனித்துவமான வாக்குறுதியைக் கொண்டு வந்துள்ளன. குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி வழங்கியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட இருக்கும் குப்பத்தில் நடந்த பேரணியில் இந்த வாக்குறுதியை வழங்கினார். "40 நாட்களுக்குப் பிறகு (டிடிபி ஆட்சி அமைத்த பிறகு) தரமான மதுபானம் மட்டுமின்றி, விலையைக் குறைப்பதற்கான பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்," என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
மதுபானங்களின் விலையை உயர்த்தியவர் ஜெகன் மோகன் ரெட்டி
மேலும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் அவரது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் 2019ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் இருந்து விலகி ஆந்திராவில் மதுவிலக்கை அமல்படுத்தியதற்காக ஜெகன் மோகன் ரெட்டியை அவர் சாடினார். மதுபானங்களின் விலையை குறைக்க வேண்டும் என்பது நமது இளைய சகோதரர்களின் கோரிக்கை என்று குப்பத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில் கூறினார். "அனைத்து பொருட்களின் விலைகளும் அபரிமிதமாக உயர்ந்துவிட்டன, நான் மதுபானங்களைக் குறிப்பிடும்போது நம் இளைய சகோதரர்கள் ஆரவாரம் செய்கிறார்கள். மதுபானங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். 60 ரூபாயிலிருந்து ரூ. 200 மற்றும் ரூ. 100ஆக விலையை உயர்த்தியவர் ஜெகன் மோகன் ரெட்டி." என்று டிடிபி தலைவர் மேலும் கூறியுள்ளார்.