திருஷ்யம் பட பாணியில் நடந்த கொடூரம்: மனைவியைக் கொன்று உடலை எரித்த கணவன் சிக்கியது எப்படி?
செய்தி முன்னோட்டம்
புனேவில் கணவன் ஒருவன், அஜய் தேவ்கன் நடித்த பரபரப்பான திருஷ்யம் திரைப்படத்தைப் பார்த்து, அதே பாணியில் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது உடலை எரியூட்டி, பின்னர் மனைவியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் பொய்யாகப் புகார் அளித்து நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சமீர் பஞ்சாப்ராவ் ஜாதவ் (42) என்பவர், தனது மனைவி அஞ்சலி சமீர் ஜாதவுக்குக் கள்ள உறவு இருப்பதாகச் சந்தேகப்பட்டார். இந்தக் கொலையைத் திட்டமிடுவதற்காகச் சமீர் திருஷ்யம் திரைப்படத்தை மூன்று முதல் நான்கு முறை பார்த்துள்ளார் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. அக்டோபர் 28 அன்று, தனது மனைவி காணாமல் போனதாகச் சமீர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
முரண்
விசாரணையில் முன்னுக்குப் பின் முரண்
தனது மனைவி பற்றித் தினமும் விசாரித்து வந்த சமீர், விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. கடுமையான விசாரணைக்குள்ளான சமீர், ஒரு கட்டத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சுமார் ஒரு மாதத்துக்கு முன்பே கொலையைத் திட்டமிட்ட அவர், இதற்காக மாத வாடகைக்கு ஒரு கிடங்கைப் பிடித்துள்ளார். அங்கு முன்பே பெட்ரோல் மற்றும் விறகுகளை இருப்பு வைத்துள்ளார். அக்டோபர் 26 அன்று, அஞ்சலியை காரில் அழைத்துச் சென்று, அந்தக் கிடங்கிற்குள் வைத்து அவரைச் சாமர்த்தியமாகக் கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர், அஞ்சலியின் உடலை அந்தக் கிடங்கில் இருந்த அடுப்பில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொடூரமாக எரித்துள்ளார். எரிந்த உடலின் மிச்சங்களை அவர் ஆற்றில் வீசியுள்ளார்.
பாபநாசம்
தமிழில் கமல் நடிப்பில் வெளியான பாபநாசம்
இந்தச் சம்பவம் தொடர்பாக, சமீர் ஜாதவ் மீது கொலை (BNS 103) மற்றும் ஆதாரங்களை அழித்தல் (BNS 238) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது. திரிஷ்யம் படம் முதலில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த நிலையில், தமிழில் நடிகர் கமல் முதன்மை வேடத்தில் நடிக்க, பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.