புதுச்சேரியில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், சனிக்கிழமை (நவம்பர் 15) நடைபெறவுள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வு (TET) காரணமாக, அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கடும் வெப்ப அலை காரணமாக வழங்கப்பட்ட மூன்று நாள் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 15 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு சனிக்கிழமை நடைபெறுவதால், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வானது (TET), புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் ஒரு மாநில அளவிலான நுழைவுத் தேர்வாகும்.
தேர்வு
தேர்வு விவரங்கள்
1 முதல் 8 ஆம் வகுப்பு வரைப் பாடம் நடத்த விரும்பும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இது கட்டாயத் தேர்வாக உள்ளது. நவம்பர் 15 அன்று தாள் 1 தேர்வும், நவம்பர் 16ஆம் தேதி தாள் 2 தேர்வும் நடைபெற உள்ளது. தாள் 1 தேர்வு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும், தாள் 2 தேர்வு 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் பாடம் நடத்தத் திட்டமிட்டுள்ள ஆசிரியர்களுக்கான தகுதிச் சான்றிதழை வழங்கப் பயன்படுத்தப்படுகிறது. நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஈடுசெய்யும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.