
கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.
இவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு அங்கு 2.23 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டும் பணி அரசு சார்பில் ஏற்கனவே நடந்து வருகிறது.
இந்நிலையில் இது இல்லாமல், நடுக்கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்திற்கு பிரமாண்ட 'பேனா' நினைவு சின்னம் ஒன்றினை அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாம்.
கண்ணாடி பாலம் வழியாக கடல் மேல் மக்கள் நடந்து சென்றுநினைவிடத்தை காண்பது போல இதனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்' என பெயரிட்டுள்ளார்கள்.
ஜனவரி 30ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
சென்னை கலைவாணர் அரங்கில், காலை 10.30 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம்
இந்நிலையில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி தமிழக அரசுக்கு கிடைத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக பொதுமக்களிடம் இது குறித்த கருத்துக்களை கேட்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 30ம் தேதியன்று சென்னை கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான பேரிடர் மீட்பு திட்டம் குறித்த விவரங்கள், அவசர கால செயல் திட்டங்கள், வரைவு சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை, அதன் செயல்முறை திட்ட சுருக்கமும் சென்னை ரிப்பன் பில்டிங் அலுவலகம், கிண்டி மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம், சென்னை கலெக்டர் அலுவலகம், ஒவ்வொரு தாசில்தார் அலுவலகங்கள் என மக்கள் பார்வைக்காக அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.