பள்ளி கட்டணத்தினை செலுத்தாத மாணவர்களை வெளியில் நிறுத்த கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாடு அரசு பள்ளியில் வரும் 2023-24 கல்வியாண்டிற்கான 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான சேர்க்கை இன்று(ஏப்ரல்.,17) துவங்கியது. அதன்படி இதனை சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் சேகர்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர். அதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். அதில் அவர், அரசு பள்ளிகளில் பல சலுகைகளை நாங்கள் கொடுத்து வருகிறோம். மாணவர் சேர்க்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது 11 லட்சமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் அறிவுரையின் படி மாணவர் சேர்க்கையினை அரசு பள்ளியில் அதிகரிக்கவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றும் கூறினார்.
தனியார் பள்ளி கட்டமைப்புகளை கொண்டே கட்டண வசூல்
தொடர்ந்து பேசிய அவர், அரசு பள்ளிகளை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் குறைபாட்டினை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து, தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது குறித்து வேண்டுகோள் வைத்துள்ளோம். கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியில் நிறுத்தி வைக்கக்கூடாது என்றும் கூறியிருக்கிறோம். தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் தங்கள் பள்ளி கட்டமைப்புகளை கொண்டே கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனை கண்காணிக்க கட்டண ஆய்வுக்குழு உள்ளது என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்