அரசுமுறை பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு கடந்த 5ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். தமிழகம் வந்த அவர், சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அதன்பின், ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் புது பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெயர் பலகையினை திறந்து வைத்தார். முன்னதாக முதுமலை யானைகள் காப்பகத்திற்கு அங்கிருந்த யானைகளை பார்வையிட சென்ற திரெளபதி முர்மு, தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு காரில் மிகுந்த பாதுகாப்போடுசென்று அங்குள்ள யானை பராமரிப்பாளர்களான பொம்மன்-பெல்லி தம்பதியினை சந்தித்து பேசினார்.
நினைவு பரிசுகளை வழங்கி வழியனுப்பி வைக்கப்பட்டார்
அதனை தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புதிதாக அமைத்துள்ள அதிநவீன கதிரியக்க சிகிச்சை உபகரணம், ஆயுஷ் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார். பின்னர் புதுச்சேரி அரசாங்கத்தால் வழங்கப்படும் குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதன் பின்னர் இன்று(ஆகஸ்ட்.,8) ஆரோவில்லில் ஜனாதிபதி அவர்கள், மாத்ரிமந்திர் என்னும் நகர கண்காட்சிக்கு சென்று அங்கு நடந்த மாநாட்டினை துவக்கி வைத்துள்ளார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது சுற்றுப்பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லிக்கு புறப்பட்டார். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மனோ தங்கராஜ், துரைமுருகன், மேயர் பிரியா, பெரியசாமி உள்ளிட்டோர் அவருக்கு நினைவு பரிசுகளை வழங்கி வழியனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.