Page Loader
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம்
சென்னை மெரினாவில் மணல் பரப்பே தெரியாத அளவிற்கு கூடிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம்

எழுதியவர் Nivetha P
Jan 19, 2023
08:31 am

செய்தி முன்னோட்டம்

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் விழா மிக உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் பூங்கா, கடற்கரை என சுற்றுலா தலங்களில் காலை முதலே கூட்டம் கூட்டமாக குவிய துவங்கினர். மெரினா கடற்கரையில் மணல் பரப்பே தெரியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் திரும்பி செல்லும்பொழுது குப்பைகளை ஆங்காங்கே விட்டு சென்றதால், கடற்கரை முழுவதும் குப்பைகளாக காணப்பட்டது. இதனையடுத்து, நேற்று இரவுமுதலே கடற்கரையில் காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக துவங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடியவிடிய குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கமாக மெரினாகடற்கரை பகுதிகளில் 10டன் குப்பைகள் சேருமாம். ஆனால், நேற்று காணும் பொங்கலையொட்டி 5 மடங்காக உயர்ந்து 50டன் குப்பைகள் மெரினாவில் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது.

235டன் குப்பை அகற்றம்

பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை கடற்கரைகளிலும் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் நீச்சல் குளம் அருகே ஒருங்கிணைக்கப்பட்டு லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகே, மெரினா கடற்கரை அழகாக காணப்பட்டது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "மெரினா கடற்கரையில் நேற்று இரவு முதலே குப்பைகள் அகற்றும் பணி துவங்கிவிட்டது. வழக்கத்தை விட 5 மடங்கு அதிக குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இதே போல், பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் கூடியதால் வழக்கத்தை விட அதிகளவு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி 235 டன் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், அதில் 50 டன் குப்பைகள் மெரினா கடற்கரையில் இருந்து மட்டுமே அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.