பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா?
ஒவ்வொரு ஆண்டும் அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு பொருட்களைத் தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 2017ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு பொங்கலுக்கும் தமிழக அரசு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்த பொங்கலுக்கு கிட்டத்தட்ட 2.20 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட இருக்கிறது. இதில் வழங்கப்பட இருக்கும் வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மனுதாரரின் கோரிக்கை என்ன?
இதே போல் பொங்கலுக்கு வழங்கப்படும் 20 விவசாய பொருட்களும் தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பதே இந்த மனுதாரரின் கோரிக்கை. இதுவரை இந்த பொருட்கள் பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் இருந்தே வாங்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் இந்த பொருட்கள் தரமானதாக இருப்பதில்லை. இதற்கு பதிலாக அவற்றை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்தால் நம் விவசாயிகளும் பலனடைவர் என்றும் அவர் தன் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலர், தமிழக கூட்டுறவுத்துறை செயலர், ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கை வரும் டிசம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.