
பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு
செய்தி முன்னோட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பிரச்சனையின் போது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களோடு அரசாணை வெளியிட்டதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் தலைமை செயலாளரிடம் விசாரணை நடத்த இதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை சிலர் மிரட்டி தவறாக படம் எடுத்து அவர்களை கூட்டு பலாத்காரம் செய்தததாக பெரும் சர்ச்சை கிளம்பியது.
அந்த பிரச்சனையில் பல அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது.
இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்த போது எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக இருந்தார்.
இந்நிலையில் அவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
பொது நல மனு தாக்கல்
இந்த பொதுநல மனுவை சென்னையை சேர்ந்த பாலசந்தர் தாக்கல் செய்திருக்கிறார்.
பொதுநல மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
2019ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேர் கைது செய்ப்பட்டனர். அது இன்னும் முழுமையாக விசாரிக்கப்படவில்லை. இதற்கிடையில், தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், பாதிக்கப்பட்ட பிற பெண்களால் புகார் அளிக்க முடியாமல் போனது.
பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய கோவை மாவட்ட எஸ்பி பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
மேலும், அப்போதைய, தமிழக முதல்வர் இபிஎஸ் மற்றும் தலைமை செயலாளரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.