LOADING...
அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து அதிரடி நீக்கம்; அரசியல்வாதியாக இருக்கவே தகுதியற்றவர் என டாக்டர் ராமதாஸ் காட்டம்
அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து அதிரடி நீக்கம்

அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து அதிரடி நீக்கம்; அரசியல்வாதியாக இருக்கவே தகுதியற்றவர் என டாக்டர் ராமதாஸ் காட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 11, 2025
10:55 am

செய்தி முன்னோட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு அனுப்பிய 16 குற்றச்சாட்டுகளுக்கு அவர் எந்தப் பதிலும் அளிக்காத காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்புமணியின் இந்தச் செயல்கள், தான் தோன்றித்தனமாகவும், அரசியல்வாதியாக இருப்பதற்கே தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளதாகவும் ராமதாஸ் கூறினார். மேலும், அன்புமணி கட்சிக்கு எதிராகச் செயல்படுவதாகவும், கட்சியை அழிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார். இதனால், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

எச்சரிக்கை 

அன்புமணியின் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை

அன்புமணியின் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ராமதாஸ், "அன்புமணி உடன் நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது. மீறினால், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். அதே சமயம், அன்புமணியுடன் இணைந்து செயல்பட்டு வரும் சிலரை மன்னித்து ஏற்றுக்க்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், அன்புமணியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய ராமதாஸ், "மூத்த தலைவர்கள் அறிவுரை கூறியும் அதை அன்புமணி கேட்கவில்லை. அவர் தனியாகக் கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்று மூன்று முறை அவரிடம் கூறியுள்ளேன்" என்றும் தெரிவித்தார். 45 ஆண்டுகளாக உழைத்து, மிகவும் கஷ்டப்பட்டு பாமகவை உருவாக்கியதாகவும், ஆனால் அன்புமணிக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.