பிஎம் வித்யாலக்ஷ்மி திட்டம்: பிணை இல்லாமல் 7.5 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெறுவது எப்படி?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நிதிச் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு பிஎம் வித்யாலக்ஷ்மி என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்கள் எந்தவொரு சொத்துப் பிணையோ அல்லது உத்தரவாததாரரோ இன்றி 7.5 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் பெற முடியும். தேசிய கல்விக் கொள்கை 2020 இன் கீழ் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து வழங்குகின்றன.
வழிமுறை
விண்ணப்பிப்பதற்கான 3 எளிய வழிமுறைகள்
இணையதளம் மூலம் இக்கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க 3 எளிய வழிமுறைகளை மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. முதலாவதாக, மாணவர்கள் தங்களின் அடிப்படை விபரங்களை வழங்கி பிஎம் வித்யாலக்ஷ்மி அதிகாரப்பூர்வ போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இரண்டாவதாக, அங்குள்ள பொதுவான கல்விக்கடன் விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். இறுதியாக, தங்களுக்குத் தேவையான மற்றும் தகுதியான வங்கியைத் தேர்ந்தெடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட அந்த ஒற்றை விண்ணப்பப் படிவத்தை ஆன்லைன் மூலமாகவே எளிதாக சமர்ப்பிக்கலாம்.
வட்டி மானியம்
75 சதவீத கடன் உத்தரவாதமும் வட்டி மானியமும்
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கல்விக்கடன்களுக்கு மத்திய அரசு 75 சதவீத கடன் உத்தரவாதத்தை வழங்குகிறது. மேலும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் வரை கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இந்த வட்டி சலுகையானது மாணவர்கள் தங்களது படிப்புக் காலத்தில் செலுக்க வேண்டிய ஒட்டுமொத்த வட்டி சுமையை கணிசமாக குறைக்க உதவும்.
கல்வி அமைச்சகம்
கல்வி அமைச்சகத்தின் முக்கிய ஆலோசனைகள்
மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன்பாக, அவர்கள் தேர்வு செய்துள்ள கல்வி நிறுவனம் தகுதிவாய்ந்த உயர் கல்வி நிறுவனங்களின் (QHEIs) பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை அதிகாரப்பூர்வ போர்ட்டலில் சரிபார்க்க வேண்டும். மேலும், விண்ணப்ப செயல்முறைகளில் தேவையற்ற தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, இத்திட்டத்தின் கீழ் பங்கேற்கும் வங்கிகளின் பட்டியல், தேவையான ஆவணங்கள் மற்றும் கடன் மறுபரிசீலனை வழிகாட்டுதல்களைப் போர்ட்டலில் முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளுமாறு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.