அமெரிக்க பயணத்தின் போது எலான் மஸ்க் உள்ளிட்ட முக்கிய நபர்களைச் சந்திக்கும் பிரதமர்
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அழைப்பின் பேரில் இன்று அமெரிக்கா செல்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. வரும் ஜூன் 24 வரை பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க்கை சந்திக்கவிருக்கிறார் பிரதமர் மோடி. இதற்கு முன்னதாக 2015-ல் கலிஃபோர்னியாவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் எலான் மஸ்க்கை மோடி சந்தித்திருக்கிறார். இந்தியாவில் தங்களுடைய தொழிற்சாலையை நிறுவுவதற்காக டெஸ்லா திட்டமிட்டு வரும் நிலையில், எலான் மஸ்க்கை மோடி சந்திப்பது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான வாய்ப்புகளை பரிசீலைனை செய்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் முக்கிய நபர்களைச் சந்திக்கும் பிரதமர்:
எலான் மஸ்க் தவிர, பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் மற்றும் தலைவர்களை இந்தப் பயணத்தின் போது சந்திக்கவிருக்கிறார் பிரதமர் மோடி. சந்திப்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட துறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள், அமெரிக்காவில் அதன் வளர்ச்சி எனப் பல்வேறு விஷயங்களைக் குறித்து அவர்களுடன் உரையாடவிருக்கிறார் இந்தியப் பிரதமர். விண்வெளி இயற்பியலாளர் நீல் டிகிரேஸி டைஸன், பொருளாதார நிபுணர் பால் ரோமர், புள்ளியியல் நிபுணர் நிகோலஸ் நசீம் தாலெப் மற்றும் முதலீட்டாளர் ரே தாலியோ ஆகியோரைச் சந்திருக்கவிருக்கிறார் மோடி. இவர்கள் மட்டுமல்லாமல், இந்திய-அமெரிக்க பாடகரான ஃபலூ ஷா, எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளரான ஜெஃப் ஸ்மித், முன்னாள் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியான மைக்கேல் ஃப்ரெமன் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரான சந்திரிகா டான்டன் ஆகியோரையும் பிரதமர் சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.