LOADING...
இந்தியா - ஜப்பான் மாநாடு 2026: ஜப்பான் பிரதமர் சனாயே டகாயிச்சியை 'தங்கை' என அழைத்த பிரதமர் மோடி
ஜப்பான் பிரதமர் சனாயே டகாயிச்சியை 'தங்கை' என அழைத்த பிரதமர் மோடி

இந்தியா - ஜப்பான் மாநாடு 2026: ஜப்பான் பிரதமர் சனாயே டகாயிச்சியை 'தங்கை' என அழைத்த பிரதமர் மோடி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 02, 2026
05:26 pm

செய்தி முன்னோட்டம்

உலகளவில் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் 'இந்தியா - ஜப்பான் வருடாந்திர மாநாடு' டெல்லியில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதன்முறையாக இந்தியா வந்துள்ள ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனாயே டகாயிச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்றுப் பேசினார். அப்போது, இருநாட்டுத் தலைவர்களும் தங்களின் தனிப்பட்ட பாசப் பிணைப்பை வெளிப்படுத்திய விதம் சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தங்கை

ஜப்பான் பிரதமரைத் தங்கை என்ற மோடி

மாநாட்டில் ஜப்பான் பிரதமரை வரவேற்றுப் பேசிய பிரதமர் மோடி, சனாயே டகாயிச்சியைத் தனது "அன்பான தங்கை" எனக் குறிப்பிட்டு பேசினார். மேலும், "உலகளாவிய குழப்பங்கள் நீடித்து வரும் இன்றைய காலகட்டத்தில், இருநாடுகளுக்கும் இடையே இருக்கும் பரஸ்பர நம்பிக்கைதான் நமது மிகப்பெரிய மூலோபாய சொத்து. மோட்டார் வாகனத் துறை முதல் எலக்ட்ரானிக்ஸ் துறை வரை இந்தியாவின் அசாத்திய வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது" என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார். ஜப்பான் பிரதமர் டகாயிச்சி, இந்தியாவுடன் பௌத்த பாரம்பரியத் தொடர்பைக் கொண்டுள்ள நாரா மாகாணத்தை சேர்ந்தவர் என்பதையும் மோடி சுட்டிக்காட்டினார்.

ஜப்பான் பிரதமர் பதில்

அண்ணன் - தங்கையாக உறவை வளர்ப்போம் என ஜப்பான் பிரதமர் பதில்

பிரதமர் மோடியின் பாசமான வரவேற்பிற்கு நெகிழ்ச்சியுடன் பதிலளித்த ஜப்பான் பிரதமர் சனாயே டகாயிச்சி, "பிரதமர் மோடி என்னை அழகான தங்கை என்று அழைத்தார். மாநாட்டிற்கு முன்பாக நடந்த எங்களின் சிறிய ஆலோசனைக் கூட்டத்திலேயே, நாங்கள் இருவரும் ஒரே நேர்க்கோட்டில் சிந்திப்பதை உறுதி செய்துகொண்டோம். இனிவரும் காலங்களில் இந்த இருநாட்டு உறவை ஒரு அண்ணன் - தங்கை உறவாகவே நாங்கள் வளர்த்தெடுப்போம்." என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Advertisement

பாதுகாப்புத் துறை

கடல்சார் பாதுகாப்பு மற்றும் கூட்டு ராணுவப் பயிற்சி

இந்த மாநாட்டில் இருநாடுகளுக்கு இடையிலான ராணுவ மற்றும் கடல்சார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் மேம்படுத்தப்பட்ட சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் கொள்கையும், இந்தியாவின் மகாசாகர் திட்டமும் ஒரே குறிக்கோளைக் கொண்டுள்ளதால், பிராந்திய அமைதிக்காக கடல்சார் கூட்டுறவை அதிகரிக்க இரு தலைவர்களும் சம்மதித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் அழிப்புக் கப்பலும், இந்திய கடற்படைக் கப்பலும் விரைவில் இந்தியப் பெருங்கடலில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. மேலும், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவத் தளவாடங்களைத் தயாரிப்பதையும், கப்பல் பழுதுபார்ப்புப் பணிகளை மேம்படுத்துவதையும் இருநாடுகளும் உறுதி செய்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் 2+2 பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

Advertisement

பொருளாதாரம்

பசுமை எரிசக்தி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு உத்திகள்

பொருளாதாரப் பாதுகாப்பைப் பலப்படுத்தவும், குறிப்பாக நவீன தொழில்நுட்பங்களுக்குத் தேவைப்படும் அரிய தாதுக்களின் விநியோகச் சங்கிலியைத் தங்கு தடையின்றி சீராக வைத்திருக்கவும் இரு நாடுகளும் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவின் கச்சா எண்ணெய் சேமிப்பு அமைப்பை வலுப்படுத்த ஜப்பான் தனது பவர் ஏசியா திட்டத்தின் கீழ் உதவவுள்ளது. அத்துடன், சர்வதேச எரிசக்தி முகமையில் இந்தியா முழுநேர உறுப்பினராவதற்கு ஜப்பான் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் சுற்றுச்சூழல் இலக்கான, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாட்டு சாணத்தைப் பயன்படுத்தி 1,000 பயோ-கேஸ் ஆலைகளை அமைக்கும் திட்டத்திற்கும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement