சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை! ஜி ஜின்பிங் எதிரிலேயே பிரதமர் மோடி அதிரடி பேச்சு; பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய பிரகடனம்
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொழில் துறைக்கு அவசியமான முக்கியத் தாதுக்கள் (Critical Minerals) மற்றும் தொழில்நுட்பங்களை சில நாடுகள் ஆயுதமாக பயன்படுத்துவது உலகளாவிய வளர்ச்சிக்குத் தடையை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். சர்வதேச அளவில் அரிய வகை தாதுக்களின் (Rare Earths) விநியோகத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் எதிரிலேயே பிரதமர் மோடி இந்த அதிரடிக் கருத்தைப் பதிவு செய்துள்ளார். லடாக்கில் இருநாட்டு எல்லைப் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த உரை சீனாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
சவால்கள்
சுழற்சி விநியோகச் சங்கிலி மற்றும் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்
மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள் மற்றும் செமிகண்டக்டர்கள் போன்ற அதிநவீனத் தொழில்நுட்ப உற்பத்திக்குத் தேவையான அரிய தாதுக்களின் ஏற்றுமதிக்கு சீனா அண்மையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
உற்பத்தி மற்றும் பசுமை ஆற்றல் துறையை அதிவேகமாக விரிவாக்கம் செய்து வரும் இந்தியாவிற்கு இந்தத் தாதுக்களின் சீரான விநியோகம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
இதனை மனதில் கொண்டே, பிரிக்ஸ் அமைப்பின் கீழ் உருவாக்கப்பட உள்ள விநியோக சங்கிலி உள்கட்டமைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் வர்த்தகப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
ஸ்டார்ட்அப் நிதி
தெற்குலக நாடுகளுக்கான உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஸ்டார்ட்அப் நிதி
பிரிக்ஸ் அமைப்பின் மூலம் உருவாக்கப்படும் தொழில்நுட்பத் தீர்வுகள் அனைத்தும் உறுப்பு நாடுகளுக்கு மட்டுமேயின்றி, தெற்குலக (Global South) வளரும் நாடுகள் அனைத்திற்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதற்காகத் தொடக்க நிறுவனங்களை இணைக்கும் பிரிக்ஸ் இன்குபேட்டர் நெட்வொர்க் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதியளிக்க பிரிக்ஸ் ஸ்டார்ட்அப் நிதி ஆகிய சிறப்பான திட்டங்களை இந்தியா முன்மொழிந்துள்ளது.
மேலும் தொற்றும் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் எச்சரிக்கை அமைப்பை உருவாக்க உறுப்பு நாடுகள் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு
டிஜிட்டல் வேளாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட உள்ள பிரிக்ஸ் டிஜிட்டல் வேளாண்மை நெட்வொர்க் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவை நேரடியாக விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கப்படும்.
பல்வேறு கலாச்சார பின்னணிகளைக் கொண்டிருந்தாலும், சர்வதேச அமைதியில் கூட்டுப் பொறுப்புடன் செயல்படுவதே பிரிக்ஸ் அமைப்பின் நோக்கம் எனப் பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
உலகின் பிற நாடுகளைப் போலன்றி, வளர்ந்து வரும் நாடுகளின் அனுபவங்கள் மதிக்கப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் இணைந்து உருவாக்கப்படுவதால் பிரிக்ஸ் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது.