அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையினை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை இன்று(மே.,29)நண்பகல் 12 மணியளவில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கிவைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் சமீபகாலமாக வந்தே பாரத் ரயில் சேவையினை மத்திய அரசு துவக்கி வருகிறது.
அதன்படி தற்போது அசாம் மாநிலத்திலும் இந்த சேவையானது துவக்கப்படவுள்ளது.
அசாமில் இயக்கப்படவுள்ள இந்த வந்தே பாரத் ரயிலானது கவுகாத்தி நகர்-மேற்கு வங்காள நியூ ஜல்பைகுரி நகர் இடையே இயக்கப்படவுள்ளது.
இதன் மூலம் அப்பகுதியில் சுற்றுலாத்தலங்கள் மேம்படும் என்றும் கூறப்படுகிறது.
கவுகாத்தி நகர்-மேற்கு வங்காள நியூ ஜல்பைகுரி நகர் வழித்தடத்தில் தற்போது இயங்கிவரும் அதிவேக ரயில்சேவையோடு ஒப்பிட்டு பார்க்கையில், வந்தே பாரத் ரயிலில் பயணித்தால் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் மீதமாகும் என்றும் தெரிகிறது.
வந்தே பாரத்
மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை நாட்டிற்கு அர்ப்பணிப்பு
இன்று முதல் துவங்கும் இந்த ரயில்சேவை 5 மணிநேரம் 30 நிமிடங்களில் குறிப்பிட்ட இடத்தினை சென்றடையும்.
நாட்டின் 18வது வந்தே பாரத் ரயிலான இது, வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
411கிமீ.,தூரத்தினை கடந்து விரைந்து செல்லும் இந்த ரயில் சேவையினை பிரதமர் மோடி இன்று காணொளிக்காட்சி மூலம் கொடியசைத்து துவக்கிவைக்கிறார்.
மேலும் அதிவேகரயில்கள் மாசின்றி இயக்கப்படவும், பயண நேரத்தினை குறைக்கும் வகையிலும், புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ள 182 கிமீ.,ரயில்பாதையினையும் மோடி அவர்கள் நாட்டுக்கு அர்பணிக்கிறார்.
தொடர்ந்து அசாம் லும்டிங்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஇஎம்யு மற்றும் எம்இஎம்யு பணிமனைகளையும் மோடி திறந்து வைக்கவுள்ளார். இதன் மூலம் அந்த பகுதியில் இயங்கும் டிஇஎம்யு பெட்டிகளை பராமரிக்க உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.