LOADING...
அடுத்த மாதம் ஐரோப்பா பறக்கும் பிரதமர் மோடி: செமிகண்டக்டர் துறையில் காத்திருக்கும் ஒப்பந்தம்
நரேந்திர மோடி அடுத்த மாதம் நான்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்

அடுத்த மாதம் ஐரோப்பா பறக்கும் பிரதமர் மோடி: செமிகண்டக்டர் துறையில் காத்திருக்கும் ஒப்பந்தம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 30, 2026
10:22 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளைச் சரிசெய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் நான்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மே 15 முதல் மே 20 வரை நடைபெறவுள்ள இந்தப் பயணம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் நெதர்லாந்து நாட்டுடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் செமிகண்டக்டர் கனவை நனவாக்க, டச்சு நிறுவனமான ASML உடன் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. ஏற்கனவே அந்நிறுவனம் இந்தியாவில் தனது ஆதரவு அலுவலகத்தைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

உச்சி மாநாடு

நார்வேயில் 3-வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு

நார்வே பயணத்தின் போது, பிரதமர் மோடி மூன்றாவது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். டென்மார்க், ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொள்வர். 2024-ல் இந்தியா மற்றும் EFTA நாடுகளுக்கு இடையே கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இங்கு ஆலோசிக்கப்படும். ஸ்வீடனில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் குறித்தும், இத்தாலியில் பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். குறிப்பாக இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரவுள்ள நிலையில் இத்தாலி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

UAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் 'ஸ்டாப்போவர்' மற்றும் எரிசக்தி பாதுகாப்பு

தனது பயணத்தின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) ஒரு குறுகிய பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான்-அமெரிக்கப் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைச் சமாளிக்க, அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவார். வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு குறித்தும், அமீரகத்தில் உள்ள 40 லட்சம் இந்தியர்களின் நலன் குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். கடந்த ஆண்டு பாகிஸ்தானுடனான எல்லைப் பதற்றம் மற்றும் போர்ச் சூழல் காரணமாக ரத்து செய்யப்பட்ட இந்தப் பயணம், தற்போது மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement