பிரதமர் மோடி- இலங்கை அதிபர் சந்திப்பின் எதிரொலி: 15 ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்த இலங்கை
2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் மோடியினை சந்தித்து பேசியுள்ளார். இலங்கை நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நேர்ந்த மக்கள் எழுச்சி காரணமாக அப்போதைய அதிபரான கோத்தபய ராஜபக்சே தனது பதவியினை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே இலங்கை நாட்டின் அதிபராக பதவியேற்றார். அந்நாட்டின் அதிபராக பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் முடிந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும். இந்த பயணத்தில் இலங்கை அதிபருடன் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் மற்றும் பல முக்கிய அதிகாரிகளும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இருநாட்டு மேம்பாடு மற்றும் நல் உறவு குறித்து ஆலோசனை
அதன்படி, தற்போது புதுடெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் மோடியோடு ரணில் இருநாட்டு மேம்பாடுகள் மற்றும் நட்புறவு குறித்து ஆலோசனை நடத்திவருகிறார் என்று தெரிகிறது. இதனிடையே, கடந்த 8ம்தேதி எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை ராமேஸ்வரத்தினை சேர்ந்த 15 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை சிறைபிடித்தது. மீனவர்கள் நீதிமன்றத்தில் இன்று(ஜூலை.,21)ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை தடைச்செய்துள்ள இழு வலைகளை கொண்டு, தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதாக குறிப்பிட்டார். பின்னர் தமிழக மீனவர்கள் 15 பேரினையும் இன்று மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதாகக்கூறிய நீதிபதி, இவர்கள் மீண்டும் இதேக்குற்றத்தில் ஈடுபட்டால் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும கூறி உத்தரவிட்டுள்ளார். இருநாட்டு தலைவர்கள் சந்தித்துள்ள அதேநேரத்தில்,தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.