Page Loader
மொரிஷியஸ் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி
மொரிஷியஸுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்

மொரிஷியஸ் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 11, 2025
09:14 am

செய்தி முன்னோட்டம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். போர்ட் லூயிஸில் உள்ள விமான நிலையத்தில் அவரை மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் வரவேற்றார். பிரதமர் மோடி மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொரிஷியஸ் நாட்டின் 57வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். மேலும், இந்திய கடற்படையின் போர்க்கப்பலுடன் இந்திய பாதுகாப்புப் படைகளின் ஒரு குழுவும் கொண்டாட்டங்களில் பங்கேற்கும். நீண்ட காலமாக இருக்கும் இருநாட்டின் உறவுகளுக்குப் பின்னால் உள்ள ஒரு முக்கிய காரணி மொரிஷியஸின் மக்கள்தொகை அமைப்பு ஆகும். அங்கு அதன் 1.2 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

ஒத்துழைப்பு

வர்த்தக திட்டங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்திற்கு ஒப்பந்தங்கள் 

மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலமின் அழைப்பின் பேரில், மோடியின் இந்த விஜயத்தின் போது, ​​திறன் மேம்பாடு, வர்த்தகம் மற்றும் எல்லை தாண்டிய நிதிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இந்தியா-மொரிஷியஸ் உறவுகளில் இந்த பயணம் ஒரு "புதிய மற்றும் பிரகாசமான" அத்தியாயத்தைக் குறிக்கும் என்று மோடி திங்களன்று புறப்படுவதற்கு முன்னதாக நம்பிக்கை தெரிவித்தார். மொரிஷியஸின் தேசிய தின கொண்டாட்டங்கள் புதன்கிழமை நடைபெறும். தனது பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடி, இந்தியாவின் மானிய உதவியுடன் கட்டப்பட்ட இரண்டு முக்கிய திட்டங்களை, சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் ஒரு பகுதி சுகாதார மையத்தைத் திறந்து வைப்பார்.