உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 10) உத்தரபிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ லக்னோவில் தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தலைவர்களை ஒன்றிணைத்து வணிக வாய்ப்புகளை கூட்டாக ஆராய்ந்து கூட்டாண்மைகளை உருவாக்குவதே உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023இன் நோக்கமாகும். இந்த உச்சிமாநாடு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்(MoUs) மற்றும் 25 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்களை உள்ளடக்கியது. உத்திர பிரதேசம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்
லக்னோவில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியும் கலந்து கொள்கிறார். உலகளாவிய வர்த்தக கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்து, இன்வெஸ்ட் UP 2.0யையும் ஆரம்பித்து வைப்பார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த கூட்டத்தில் பேச உள்ளனர். "உத்தரப்பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 இன்று நடைபெற இருக்கிறது. எங்கள் வாழ்வில் இவ்வளவு பெரிய நாளைக் காண்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த உச்சிமாநாடு உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான ஒரு படியாகும்." என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆலோசகர் அவனிஷ் கே அவஸ்தி ANIஇடம் கூறியுள்ளார்.