பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார்
சென்னை பெரம்பூரில் ஐ.சி.எப்-இல் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலான பணிகளை மத்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. நாட்டின் அதிவேக ரயில்கள் என ;வந்தே பாரத்' ரயில்கள் கூறப்படுகிறது. இதுவரையில் 8 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு டெல்லி-வாரணாசி, காந்திநகர்-மும்பை, சென்னை சென்ட்ரல்-மைசூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை ஐ.சி.எப். ஆலையில் தற்போது ஒன்பதாவது மற்றும் பத்தாவது வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஐந்து நாட்களில் முடிவடையவுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இன்னும் 5 நாட்களில் ரயில்களின் தயாரிப்பு பணி முடிவடையும்
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஐ.சி.எப்.,'ல் 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் ஐந்து நாட்களில் பணிகள் அனைத்தும் முழுவதுமாக நிறைவடையவுள்ளது என்று கூறினர். இவற்றை தொடர்ந்து, வாரிய உத்தரவுப்படி, ஒன்பதாவது ரயில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்தில் இருந்து சாய்நகர் ஷீரடி இடையேயும், பத்தாவது ரயில் சோலாப்பூர் முனையத்தில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் இடையேயும் இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி அவர்கள் பிப்ரவரி 10ம் தேதி மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்தில் இருந்து துவக்கி வைக்கிறார் என்பது குறிப்பிடவேண்டியவை.