40 ஆண்டுகளில் முதல்முறை: நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நியூசிலாந்திற்குப் பயணம் செய்யவுள்ள தகவலை அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருநாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதே இந்த உயர் மட்டப் பயணத்தின் முதன்மை நோக்கமாகும். மேலும், இதன் மூலம் 40 ஆண்டுகளில் முதன்முறையாக நியூசிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெறுகிறார்.
இந்திய சந்தை
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சந்தையை குறிவைக்கும் நியூசிலாந்து
பிரதமர் மோடியின் வருகை குறித்துப் பேசிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மாபெரும் பொருளாதார நாடான இந்தியா, தங்களது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரலில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் 140 கோடி நுகர்வோரைக் கொண்ட இந்தியச் சந்தை நியூசிலாந்திற்குத் திறக்கப்படுவதால், தங்களது ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்து தங்கள் மக்களுக்கு அதிக வருமானமும், புதிய வேலைவாய்ப்புகளும், ஊதிய உயர்வும் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
வரிகள் ரத்து
இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும்: 95% வரிகள் ரத்து
இந்தியா - நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய விதிகளின்படி, நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சுமார் 95 சதவீதப் பொருட்களுக்கான வரிகளைப் படிப்படியாக ரத்து செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் நியூசிலாந்தின் கிவி பழங்கள், ஆப்பிள், இறைச்சி, ஒயின் மற்றும் கம்பளி ஆகியவை இந்திய சந்தையில் எளிதாகக் கிடைக்கும். அதே நேரத்தில், இந்தியா தனது உள்நாட்டு பால் பண்ணைத் தொழில், சமையல் எண்ணெய் மற்றும் நகைப் பிரிவுகளைப் பாதுகாப்பதற்காக, 30 சதவீதப் பொருட்களை இந்த வரிவிலக்கு வரம்பிற்குள் கொண்டு வராமல் தனியே ஒதுக்கி வைத்துப் பாதுகாத்துள்ளது.
இந்தியாவிற்கான நன்மைகள்
இந்தியத் தொழில்துறைக்குக் கிடைக்கும் பலன்கள்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் 8,284 ஏற்றுமதிப் பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தையில் முதல் நாளிலிருந்தே முழுமையான வரிவிலக்குக் கிடைப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் உற்பத்தித் துறைக்குத் தேவையான மரக்கட்டைகள், கோக்கிங் நிலக்கரி மற்றும் உலோகக் கழிவுகளை நியூசிலாந்திலிருந்து எவ்வித வரியுமின்றி இறக்குமதி செய்ய முடியும் என்பதால், இந்தியாவின் உற்பத்திச் செலவுகள் பெருமளவு குறையும். இது தவிர, வேளாண் தொழில்நுட்பத்தில் நியூசிலாந்து கொண்டுள்ள நிபுணத்துவத்தைக் கொண்டு, இந்திய விவசாயிகளுக்கு ஆப்பிள் மற்றும் தேன் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களும் வகுக்கப்படவுள்ளன.
முதலீடு
20 பில்லியன் டாலர் முதலீடும் சிங்கிள் டெஸ்க் வசதியும்
அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 20 பில்லியன் டாலர் (சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்ய நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகளை எவ்விதத் தாமதமும் இன்றி மிக வேகமாக அனுமதிப்பதற்காக, இந்திய அரசாங்கம் 'நியூசிலாந்து சிங்கிள் டெஸ்க்' (Single Desk) என்ற பிரத்யேக ஒற்றைச் சாளர அனுமதி மையத்தை அமைக்க சம்மதித்துள்ளது. ஆக்லாந்து நகரில் பிரதமர் மோடி தங்கியிருக்கும் இந்த இரண்டு நாட்களில் வர்த்தகம், முதலீடு, கடல்சார் பாதுகாப்பு, கல்வி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்துப் பேசப்படுவதுடன், அங்குள்ள இந்திய வம்சாவளி மக்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.