டீம் இந்தியா உணர்வுடன் செயல்பட பிரதமர் மோடி அழைப்பு; மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பேசியது என்ன?
செய்தி முன்னோட்டம்
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மேற்கு ஆசியப் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக வழித்தடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இந்தியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 27) மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் இந்தப் போர்ச் சூழலில், இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
டீம் இந்தியா
டீம் இந்தியா அணுகுமுறை
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஒரு குழுவாக செயல்பட்டால் மட்டுமே இந்த சர்வதேச நெருக்கடியைச் சமாளிக்க முடியும் எனப் பிரதமர் வலியுறுத்தினார். மாநில அரசுகள் தங்களது பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், வதந்திகளால் பொதுமக்கள் பீதியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக வருவதை வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து 4 எல்பிஜி கப்பல்கள் ஏற்கனவே இந்தியாவை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளன. மக்களின் தேவை, உலகச் சந்தை நிலவரம் மற்றும் தற்போதைய சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தியாவின் எரிசக்தி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்
தேர்தல் மாநிலங்களுக்குத் தனி விதிமுறை
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அந்த மாநில முதலமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அந்த மாநிலங்களுக்கான தனி ஆலோசனைக் கூட்டம் அமைச்சரவைச் செயலகம் மூலம் தலைமைச் செயலாளர்களுடன் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்ச் சூழலை எதிர்கொள்ள எரிபொருள், விநியோகச் சங்கிலி, உரங்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளைக் கண்காணிக்க 7 அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களை உருவாக்குவதாகப் பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.