விதியை ஏற்றுக்கொள்பவராக அல்ல, உருவாக்குபவராக மாற வேண்டும்! 18வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த 10 முக்கிய அம்சங்கள்
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் திறந்த நிலை அமர்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வளர்ந்து வரும் தெற்குலக (Global South) நாடுகள் சர்வதேச அரங்கில் வெறும் விதிகளை ஏற்றுக்கொள்பவராக இல்லாமல், புதிய விதிகளை உருவாக்குபவராக மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச முடிவெடுக்கும் தளங்களில் தெற்குலக நாடுகளுக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் சர்வதேச அதிகார அமைப்பை மாற்றியமைக்கும் நோக்கில் உலகளாவிய ஆட்சி நிர்வாகத்திற்கான 10 அம்ச சீர்திருத்த ரோடு மேப்பையும் கூட்டத்தில் முன்மொழிந்தார்.
கூட்டாண்மை
சலுகைகளின் பிரமிடை கூட்டாண்மையின் தளமாக மாற்றுதல்
தற்போதைய சர்வதேச அமைப்பைக் கடுமையாகச் சாடிய பிரதமர் மோடி, உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதில் தெற்குலக நாடுகள் முதல் வரிசையில் உள்ள போதிலும், முக்கியமான முடிவுகளை எடுக்கும் தளங்களில் அவை கடைசி வரிசையிலேயே தள்ளப்படுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
"அதிகாரம் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே குவிந்திருக்கும் 'சலுகைகளின் பிரமிடை' நாம் அனைவரும் இணைந்து செயல்படும் 'கூட்டாண்மையின் தளமாக' மாற்ற வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கால தாமதமின்றி சீர்திருத்தங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாலுமிகள் பாதுகாப்பு
இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் கடல் மாலுமிகள் பாதுகாப்பு நெட்வொர்க்
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் போன்ற அதிநவீனத் துறைகளில் தெற்குலக நாடுகளின் இளைஞர்களுக்குப் பேச்சுவார்த்தை திறன்கள், நடைமுறைப் பயிற்சிகள் மற்றும் சட்டப் வல்லுநர்களுக்கான ஆதரவை பிரிக்ஸ் அமைப்பு வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடி யோசனை தெரிவித்தார்.
மேலும் சர்வதேச வர்த்தகத்திற்குப் முதுகெலும்பாக இருக்கும் கப்பல் ஊழியர்கள் மற்றும் மாலுமிகளுக்கு அவசர காலங்களில் உதவ மாலுமிகள் அவசரகால ஆதரவு நெட்வொர்க் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.
புதுடெல்லி பிரகடனம்
பிரிக்ஸ் புதுடெல்லி பிரகடனம் ஏகமனதாக ஏற்பு
பிரதமர் மோடியின் உரையைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் புதுடெல்லி பிரகடனத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டன.
இந்த பிரகடனத்தில் மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றமான சூழல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டதுடன், அனைத்துத் தரப்பினரும் தீவிரக் கட்டுப்பாட்டைப் பேண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
உலக மக்கள் தொகையிலும் பொருளாதாரத்திலும் பெரும்பான்மை பங்கு வகிக்கும் தெற்குலக நாடுகளுக்கு சர்வதேச நிதியமைப்புகளின் வாக்களிப்பு உரிமையிலும் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.