வீட்டிலிருந்தே வேலை, தங்கம் வாங்காதீங்க!': நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள்
செய்தி முன்னோட்டம்
நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கத்தைத் தவிர்க்க, மீண்டும் Work From Home முறையைத் தொடங்குமாறும், எரிபொருள் மற்றும் தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 70 டாலரிலிருந்து 126 டாலராக உயர்ந்துள்ளது. இது குறித்துப் பேசிய பிரதமர்,"பெட்ரோல், டீசலுக்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. கொரோனா காலத்தில் நாம் பழகிய ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறைகளை மீண்டும் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
தவிர்ப்பு
தங்கம் மற்றும் சமையல் எண்ணெய் தவிர்ப்பு
வெளிநாட்டுச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில், ஒரு வருடத்திற்குத் திருமணங்களுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் ஒரு அதிரடி கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும், சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க அதன் பயன்பாட்டைக் குறைக்குமாறும், இது தேசப்பற்றுடன் தொடர்புடையது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேபோல், விவசாயத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டைப் பாதியாகக் குறைத்து இயற்கைப் விவசாயத்திற்கு மாற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Nation First Duty Above Comfort!
— MyGovIndia (@mygovindia) May 10, 2026
PM @narendramodi gave 7 important appeals to strengthen India during challenging global times prioritize work from home wherever possible, reduce fuel consumption, avoid foreign travel for a year, adopt Swadeshi products, cut down cooking oil… pic.twitter.com/jhDGYTarH6
விலை உயர்வு
மே 15-க்குள் விலை உயர்வு அபாயம்?
மத்திய அரசின் இந்த வேண்டுகோளுக்கு மத்தியில், மே 15-ஆம் தேதிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும் மாற்றம் ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வரும் நஷ்டத்தைச் சரிசெய்ய, பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 40 முதல் 50 ரூபாய் வரையிலும் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே எரிபொருள் ரேஷன் முறையை அமல்படுத்தியுள்ள நிலையில், இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துச் சூழலைச் சமாளித்து வருகிறது. இருப்பினும், சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதே பிரதமரின் கோரிக்கையாகும்.