'மணிப்பூரில் வன்முறை குறைந்து வருகிறது': ராஜ்யசபாவில் பிரதமர் மோடி
மக்களவையில் நேற்று காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசிய பிரதமர் மோடி, இன்று ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து உரையாற்றினார். மக்களவையில் ஆற்றிய உரையைப் போலவே, ராஜ்யசபாவிலும் மிக விவேகமாக பேசிய பிரதமர் மோடி, எதிர்கட்சிகளின் கூச்சலுக்கு மத்தியில் தனது கருத்துக்களை முன்வைத்தார். நேற்று மக்களவையில் இரண்டு மணி நேரம் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்துக்கள் வன்முறையாளர்கள் என்ற பொய்யான பிரச்சாரத்தை காங்கிரஸ் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். இதற்கிடையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் "மணிப்பூருக்கு நீதி" மற்றும் "பாரத் ஜோடோ" என்று கடும் முழக்கங்களை எழுப்பினர்.
"இந்துக்கள் மீது உங்களுக்கு வெறுப்பா?": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
காங்கிரஸும் அதன் "மொத்த சுற்றுப்புறமும்" இந்து மதத்தை இழிவாகப் பார்க்கவும், துஷ்பிரயோகம் செய்யவும், அவமதிக்கவும் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். "இந்துக்கள் மீது பொய் வழக்கு போட சதி நடக்கிறது என்பது மிக பயங்கரமான விஷயமாகும். இந்துக்கள் வன்முறையாளர்கள் என்று கூறப்படுகிறது. இதுவா உங்கள் கொள்கை? இதுவா உங்கள் குணாதிசயங்கள்? நாட்டின் இந்துக்கள் மீது உங்களுக்கு வெறுப்பா?" என்று பிரதமர் மோடி நேற்று கேள்வி எழுப்பினார். கடந்த திங்கள்கிழமை அன்று, மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, "இந்துக்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். எனவே நீங்கள் இந்துக்கள் அல்ல." என்று பாஜகவை கடுமையாக சாடி பேசி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடியின் நேற்றைய உரை அமைந்திருந்தது.
பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் கூறியதாவது:
ராஜ்யசபாவில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, "எங்களது அரசாங்கத்தின் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் 20 ஆண்டுகள் உள்ளன. நாட்டு மக்களின் முடிவை இருட்டடிப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என்று கூறினார். அதன் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி பாராட்டியதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையில் தலையிட முயன்றார். ஆனால் அவரை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. "இந்த நாட்டு மக்களின் ஞானம் மற்றும் புத்திசாலித்தனம் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவர்கள் வஞ்சக அரசியலை நிராகரித்துள்ளனர்" என்று பிரதமர் கூறினார்.
பிரதமர் உரையின் போது எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன
எதிர்க்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளித்தார். எதிர்க்கட்சிகள் விதிகளை மீற முயற்சித்ததால், "நான் விதிகளின்படி நடக்க வேண்டும்," என்று சபாநாயகர் ஜகதீப் தங்கர் எதிர்க்கட்சி பெஞ்ச்களிடம் கூறினார். இதற்கிடையில், "நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது" என்று பிரதமர் மேலும் கூறினார். சில நிமிடங்களுக்குப் பிறகு, பிரதமர் உரைக்கு நடுவில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. "அவர்களால் உண்மையைக் கேட்க முடியாது. அதனால்தான் அவர்கள் ஓடுகிறார்கள்" என்று பிரதமர் மோடி தொடர்ந்து பேசினார்.
எதிர்க்கட்சி கண்ணியத்தை விட்டுச் சென்றுவிட்டன: தன்கர்
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததை அடுத்து, சபாநாயகர் தன்கர், "இன்று, அவர்கள் சபையை விட்டு வெளியேறவில்லை, கண்ணியத்தை விட்டுச் சென்றுள்ளனர், இன்று, அவர்கள் எனக்கு முதுகைக் காட்டவில்லை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காட்டியுள்ளனர். அவர்கள் இன்று என்னையோ அல்லது உங்களையோ அவமானப்படுத்தவில்லை. அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்துவிட்டார்கள். என்று கூறினார்.
மைக்ரோ பிளானிங் மூலம் விவசாயத் துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
பிரதமர் தனது உரையை தொடர்ந்தார். "பண்ணை முதல் சந்தை வரை நுண்ணிய திட்டமிடல் மூலம் விவசாயத் துறையை அரசு பலப்படுத்தியுள்ளது" என்று அவர் கூறினார். "ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்(காங்கிரஸ் கூட்டணி) கடன் தள்ளுபடியின் மூலம் வெறும் மூன்று கோடி விவசாயிகள் தான் பயனடைந்துள்ளனர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(பாஜக கூட்டணி) PM-Kisan திட்டத்தால் 10 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்." என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்
எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி, "அவர்களின் மகிழ்ச்சியின் பின்னணியில் உள்ள காரணம் எனக்குப் புரியவில்லை? ஹாட்ரிக் தோல்விக்காக அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்களா? மற்றொரு தோல்வியால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பினார். பெண்களின் பாதுகாப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை சாடி பேசிய பிரதமர், "பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறை மிகவும் கவலை அளிக்கிறது... வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண் தாக்கப்படும் வீடியோவைப் பார்த்தேன்... சந்தேஷ்காலியில் அந்த சம்பவம் நடந்துள்ளது... [எதிர்க்கட்சி] இதுபற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ." என்று கூறியுள்ளார்.
எஸ்சி/எஸ்டி/ஓபிசிக்கு எதிரான மனநிலையை காங்கிரஸ் கொண்டுள்ளது: பிரதமர்
"எதிர்க்கட்சிக்கு எதிரான தனது தாக்குதலைத் தொடர்ந்த பிரதமர், காங்கிரஸுக்கு எஸ்சி/எஸ்டி/ஓபிசி எதிர்ப்பு மனப்பான்மை உள்ளது என்று குற்றம் சாட்டினார். நாட்டின் குடியரசு தலைவரான பழங்குடியின பெண்ணை அவமானப்படுத்த அவர்கள் செய்ய வேண்டியதையெல்லாம் செய்துவிட்டார்கள். வேறு யாராலும் பயன்படுத்த முடியாத வார்த்தைகளையும் அவர்கள் பயன்படுத்திவிட்டார்கள்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அரசியல் சாசனத்தை காப்பாற்ற மக்கள் எங்களை தேர்வு செய்தனர்: மோடி
"2024 தேர்தல் அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதாக நடந்தது என்றால், அதற்காக தான் தேச மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தனர்... 1977 தேர்தல் அரசியலமைப்பைக் காப்பாற்றியது," என்று பிரதமர் கூறினார். அரசியலமைப்பை பாதுகாக்க எங்களால் மட்டுமே முடியும் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் பிரதமர் மோடி மேலும் கூறினார்.
நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்
நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி அவையில் உறுதியளித்தார். குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று கூறிய அவர், இந்த பிரச்சினையை அரசியலாக்குவதற்கு எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.
மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறைந்து வருகின்றன: பிரதமர்
மணிப்பூரில் நிலவும் இனக்கலவரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு அயராது உழைத்து வருகிறது. வன்முறை சம்பவங்கள் குறைந்து வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்குகின்றன" என்றார். நேற்று, மக்களவையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பிரதமரின் உரையின் போது, "மணிப்பூர், மணிப்பூர்" மற்றும் "எங்களுக்கு நீதி வேண்டும்" என்று ஓயாமல் முழக்கமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மக்களவையில் இந்த பிரச்னை குறித்து பிரதமர் பேசவில்லை.
'மணிப்பூர் குறித்து மத்திய, மாநில அரசு கவலை'
காங்கிரஸின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலத்தில் 10 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மேலும், "உள்துறை அமைச்சர் நீண்ட காலமாக மாநிலத்தில் தங்கியுள்ளார். அவர் மாநிலத்திற்கு அடிக்கடி சென்று பல்வேறு குழுக்களுடன் பேசி அமைதியான முடிவுக்கு வருவார். மணிப்பூரைப் பற்றி மாநில மற்றும் மத்திய கவலைப்படுகின்றன" பிரதமர் மோடி கூறியுள்ளார்.