ரஷ்யாவில் தரையிறங்கினார் பிரதமர் மோடி
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதற்கு பிறகு முதல் முறையாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மாஸ்கோ சென்றடைந்தார். ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் விமான நிலையத்தில் அவரை வரவேற்றார். மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடியின் முதல் பயணம் இதுவாகும். "எனது நண்பர் அதிபர் விளாடிமிர் புடினுடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து மறுபரிசீலனை செய்வதற்கும், பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் நான் எதிர்நோக்குகிறேன்" என்று பிரதமர் மோடி இந்தியாவை விட்டு வெளியேறும் முன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-இந்தியாவுக்கு இடையேயான உறவுகள்
இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வழங்கும் முக்கிய சப்ளையர் ரஷ்யாவாகும். சமீப ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகள், சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே இந்தியாவுக்கு ஒரு அரணாக செயல்பட்டு வருகின்றன. மேலும், ஆசிய-பசிபிக் பகுதியில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இந்தியாவுடன் உறவுகளை வளர்த்து வருகின்றன. அதே நேரத்தில் ரஷ்யாவிலிருந்தும் இந்தியா தூர விலகி வந்துவிட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதற்கிடையில், பிரதமர் மோடி கடைசியாக 2019 இல் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது தாக்குதலைத் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர் அங்கு சென்றிருந்தார்.