இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை மும்பையில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை(MTHL) பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மும்பையில் உள்ள செவ்ரிக்கும் ராய்காட் மாவட்டத்தில் உள்ள நவா ஷேவாவுக்கும் இடையே இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அடல் சேது என்றும் அழைக்கப்படும் டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு, இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாகும். 21.8 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடல் பாலம், தற்போதைய இரண்டு மணி நேர பயணத்தை 15-20 நிமிடங்களாக குறைக்க உள்ளது. எனினும், இந்த கடல் பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் டிராக்டர்கள் அனுமதிக்கப்படாது என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
கடலுக்கு மேல் 16.50 கிலோ மீட்டர்களுக்கு நீளும் பாலம்
ரூ.17,840 கோடி செலவில் கட்டப்பட்ட மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்(MTHL) பாலம் ஆறு வழித்தடங்களைக் கொண்டுள்ளது. மேலும், இந்த பாலம், கடலில் 16.50 கிலோ மீட்டர்களுக்கும், நிலத்தில் 5.50 கிலோ மீட்டர்களுக்கும் நீள்கிறது. மும்பை மற்றும் நவி மும்பையை இணைப்பதை தவிர, அடல் சேது பாலம், போக்குவரத்தை எளிதாக்கவும் போக்குவரத்தை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாகவும் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். அதோடு, மும்பையிலிருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கு செல்பவர்களின் பயண நேரத்தையும் குறைக்கும்.