"மரணத்தின் வாசல்வரை சென்ற தமிழர்களை கடைசி நொடியில் மீட்டேன்": வேலூர் பிரச்சார மேடையில் பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்று காலை வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், திமுகவையும், இந்தியா கூட்டணியையும் கடுமையாக சாடினார். "கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் திமுக காப்புரிமை வைத்துள்ளது. தமிழகத்தில் மணல் கொள்ளை மூலம் மட்டும் இரண்டு ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது." என்று மோடி தெரிவித்தார். "கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸும், திமுகவும்தான். கச்சத்தீவை தாரைவார்த்ததால் நமது மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இலங்கை கடற்படை மூலம் சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் என்டிஏ அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை எனது அரசு மீட்டு கொண்டுவந்தது. காங்கிரஸும், திமுகவும் மீனவர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் துரோகம் செய்தவர்கள்" என பிரதமர் தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலவும் போதைப்பொருள் கலாச்சாரம் பற்றி பேசிய பிரதமர்
"தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கமும், கடத்தலும் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை நடப்பது வேதனையளிக்கிறது". "போதை மாஃபியா எந்த குடும்பத்தோடு தொடர்பிலிருக்கிறார் என்று உங்களுக்குத்தெரியுமா? இந்த பாவங்களுக்கு எல்லாம் வருகின்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்". "மக்களைப் பிரித்தாளும் கொள்கையில் திமுக ஈடுபடுகிறது. தமிழக மக்களை மொழியால், மதத்தால், சாதியால் பிரித்தாள்கிறது திமுக. என்றைக்கு இந்த பிரித்தாளும் செயல்களை மக்கள் உணரும்போது திமுக கட்சி செல்லாக்காசாகிவிடும். இந்த 50 ஆண்டுகளில் திமுக செய்த மோசமான அரசியலை நான் தொடர்ந்து அம்பலப்படுத்துவேன்". "காசி தமிழ் சங்கமம் நடத்தினோம். ஐ.நா மன்றத்தில் தமிழ் குறித்து பேசினேன். உலகத்தில் பழமையான மொழி தமிழ் என்பதை நிறுவ முயற்சித்து வருகிறேன்".