ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம்
தமிழ்நாடு மாநிலம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியினை மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏப்ரல், மே மாதமான கோடை சீசனில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் காணப்படும். தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மலர்கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல கோடை விழாக்கள் இங்கு நடக்கும். இந்நிலையில் ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல நிகழ்ச்சிகள் இந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் புகைப்பட கண்காட்சியும் நடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்பட கண்காட்சிக்கு கட்டணம் இல்லை
அதன்படி, இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியானது அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மே 7ம் தேதி துவங்கிய இந்த கண்காட்சியானது வரும் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட வருவோருக்கு மாவட்ட நிர்வாகம் பல வசதிகளை செய்துள்ளது. இந்த கண்காட்சிக்கு என்று கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இப்புகைப்பட கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சூழல், இங்கு வாழும் வன விலங்குகள், பழங்குடி மக்களின் கலாச்சாரம், அவர்களின் வாழ்வியல் முறை, பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்களின் புகைப்படங்கள் ஆகியன வைக்கப்பட்டுள்ளது.