ராகுல் காந்தி தகுதி நீக்கத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்ய பினையும் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் தனது பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8 (3)ன் படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு ஆண்டுகளோ அதற்கு மேலாகவோ தண்டனை பெற்றால் எம்.பி., எம்.எல்.ஏ., பதவிகளிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
தகுதி நீக்கம் இந்திய சட்ட அமைப்புக்கு எதிரானது
இதன்படி, ராகுல் காந்தி 2019ல் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மக்களவை செயலகம் அறிவிப்பினை நேற்று(மார்ச்.,24) வெளியிட்டது. இந்நிலையில் தண்டனை விதிக்கப்பட்ட உடன் தகுதி நீக்கம் செய்யப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று(மார்ச்.,25) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, வழக்குகளில் தண்டனை பெற்றவுடனே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதனால் தகுதி நீக்கம் செய்ய பயன்படுத்தப்படும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு8(3)ஐ ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.