ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண் இணைப்பதற்கு எதிரான மனு - தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
தமிழகத்தில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம்தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, நவம்பர் 15ம்தேதி முதல் 2,811 மின்பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இதற்கான பணியை மின் வாரியம் துவங்கியது. இதற்கான கால அவகாசத்தை பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி 2.67கோடி மின் இணைப்பில் தற்போது வரை 90.69சதவிகிதம் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மீதம் 9.31 சதவீதம் பேர் இணைக்கவேண்டியுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தள்ளுபடி செய்யப்பட்டது.
மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று(பிப்.,13) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜோசப் மற்றும் நாகரத்னா கூறுகையில், தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது என்றும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பு தான் என்றும், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான எதிரான மனுவினை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.