தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி
தமிழகத்தில் ஒன்றிய அரசு சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக, பழைய வழியில் நிரந்தர கப்பல் இறங்கு தரைகளை அமைக்காமல் மிதக்கும் இறங்கு தளங்களை உருவாக்க அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த தளங்கள் சுற்றுசூழலுக்கு உகந்தவையாகவும், நவீனத்துவம் வாய்ந்ததாகவும் நீண்ட காலம் உழைக்கவும் ஏதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன்படி தமிழகத்தில் 4 இடங்களில் இந்த மிதவை இறங்கு தளங்களை அமைக்க அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஆன்மீக தளமான ராமேஸ்வரம் அக்னித்தீர்த்த கடற்கரை, ராமேஸ்வரம் வில்லூண்டி தீர்த்த கடற்கரையில் அமைக்கவும், கடலூர் மற்றும் கன்னியாகுமரியில் இந்த மிதவை இறங்கு தளங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்க உதவும் - நீர்வழித்துறை அமைச்சர்
இதன் மூலம், சுற்றுலா பயணிகள் தடையின்றி, பாதுகாப்பாக நீர்வழி போக்குவரத்தினை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடவேண்டியவை. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், மிதவை இறங்கு தளங்களை அமைப்பது, மாநிலங்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு பெரிதும் வழிவகுப்பதுடன் நீர் தொடர்பான சுற்றுலாவுக்கு புதிய வழிகளையும் உருவாக்கும். மேலும் இதன்மூலம் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், அப்பகுதியின் வர்த்தகமும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து, இந்த மிதக்கும் இறங்கு தளங்கள் மிதக்கக்கூடிய பொருட்களை கொண்டு கட்டப்படுகிறது என்றும், இது மிக பாதுகாப்பானதாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இவை கடல், ஏரி. ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.