பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று(செப்.,15) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, காஞ்சிபுரத்தில் கலைஞர் பெண்கள் உரிமை தொகை திட்டத்தினை துவக்கி வைக்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள அன்னை இந்திராகாந்தி சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அவரை தொடர்ந்து, சென்னை வள்ளுவர் கோட்டை பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செய்துள்ளார். அவருடன் இணைந்து அமைச்சர்கள் சேகர்பாபு, டி.ஆர்.பாலு, மா.சுப்ரமணியம் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செய்தனர் என்று கூறப்படுகிறது.
பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி
இவர்களை தொடர்ந்து அதிமுக கட்சியின் பொது செயலாளரான எடப்பாடி கே பழனிசாமி, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்துள்ளார். மேலும் அவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல் சொல், குன்றா புகழுடன் என்றும் நிலைத்து நிற்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 115வது பிறந்தநாள் அன்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பெருமையுற்றுள்ளேன்" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவரை தொடர்ந்து, பல அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.