பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய்
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகர் கோயில் அறுபடை வீடுகளில் 3வது படைவீடாக கருதப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். கோயில் நிர்வாகம் சார்பில் உண்டியலில் உள்ளவைகள் உண்டியல் நிரம்பிய பின்னர் எடுக்கப்படும். அதன்படி கடந்த 1,2ம் தேதிகளில் பழனி முருகர் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து 4ம் தேதி தைப்பூச திருவிழா நடந்த நிலையில், மீண்டும் உண்டியல் எண்ணும் பணி நடந்துள்ளது. கோயில் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில், கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து இந்த பணி 3 நாட்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3 நாட்களாக நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நிறைவுற்றது
இன்றுடன்(பிப்.,23) சேர்த்து 3 நாட்களாக நடைபெற்ற இந்த பணியின் முடிவில் உண்டியலில் கிடைத்த மொத்த வருவாய் ரொக்கமாக 7 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்து 126ரூபாய் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 கிலோ 248 கிராம் தங்கம், 48 கிலோ ஆயிரத்து 277கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சி 2529 நோட்டுக்கள் முதலியனவும் வருவாயாக கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து உண்டியல் எண்ணும் பணி நிறைவடைந்ததாக திருக்கோயில் நிர்வாகம் அண்மையில் தெரிவித்துள்ளது. பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில், தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியானது கோயில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.