பாஸ்போர்ட், ஆதார் கார்டு கையில் இருந்தாலும் இந்திய குடியுரிமைக்கு செல்லாது! அதிர்ச்சியூட்டும் உண்மையும்.. சட்ட விதிகளும்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தற்பொழுது எந்த ஆவணம் குடியுரிமைக்கான உண்மையான சான்றாகக் கருதப்படும் என்ற விவாதம் மீண்டும் நாடு முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்போர்ட் சேவா தினமான ஜூன் 25 அன்று, "பாஸ்போர்ட் என்பது இந்திய குடியுரிமைக்கான முழுமையான சான்று அல்ல" என்று மத்திய அரசு நாடாளுமன்றத்திலும் பொதுவெளியிலும் நீண்ட காலமாக நிலவி வரும் சட்ட நிலைப்பாட்டை மீண்டும் நினைவூட்டியுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் பாஸ்போர்ட் வைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தினாலும், இதன் பின்னணியில் இருக்கும் சட்டப்பூர்வ உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாஸ்போர்ட்
பாஸ்போர்ட் ஏன் குடியுரிமைக்கான சான்றாகக் கருதப்படுவதில்லை?
இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967ன் படி, இந்திய குடிமகன் அல்லாத ஒருவருக்கும் சில விசேஷ சூழ்நிலைகளில் பாஸ்போர்ட் வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்தச் சட்டத்தின் பிரிவு 6(2)(a) விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இல்லாவிட்டால் பாஸ்போர்ட் மறுக்கப்பட வேண்டும் என்று கூறினாலும், இதே சட்டத்தின் பிரிவு 20ன் படி பொது நலன் கருதி இந்தியர் அல்லாத பிற நபர்களுக்கும் அரசு பாஸ்போர்ட்டை வழங்க வழிவகை செய்கிறது. மேலும், பாஸ்போர்ட்டின் பின் பக்கத்தில் இது அரசாங்கத்தின் சொத்து என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், இதனை ஒருவர் தனது குடியுரிமைக்கான பிரத்யேக ஆவணமாகத் தனித்து நிலைநாட்ட முடியாது.
நீதிமன்ற தீர்ப்புகள்
அடையாள ஆவணங்கள் குறித்த நீதிமன்றத் தீர்ப்புகள்
மும்பை உயர் நீதிமன்றம் கடந்த 2013 ஆம் ஆண்டு மற்றும் சமீபத்திய பாபு அப்துல் சர்தார் வழக்குகளில், ஒரு நபரின் குடியுரிமை குறித்த கேள்விகள் அனைத்தும் இந்திய குடியுரிமைச் சட்டம் 1955ன் கீழ் மட்டுமே ஆராயப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு அல்லது அடையாள ஆவணங்கள் ஆகியவை ஒருவர் இந்தியாவில் வசிக்கிறார் என்பதை நிரூபிக்கலாமே தவிர குடியுரிமையை அல்ல என்று நீதிமன்றங்கள் விளக்கியுள்ளன. குறிப்பாக, வாக்காளர் அட்டை தேர்தலில் வாக்களிக்க மட்டுமே பயன்படுவதால், அதை வைத்து மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் என்று கூற முடியாது என தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
குடியுரிமை சட்டம்
இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 கூறுவது என்ன?
இந்தியாவில் ஒருவர் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை பெற அவர் பிறந்த வருடத்தின் படியான விதிகள் மிகவும் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, ஜனவரி 26, 1950 முதல் ஜூலை 1, 1987க்குள் இந்தியாவில் பிறந்தவர்கள் மட்டுமே பிறப்பின் அடிப்படையில் நேரடி குடிமகனாக மாற முடியும். ஜூலை 1987க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களது பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருந்தாலோ, மற்றும் டிசம்பர் 3, 2004க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களது பெற்றோர் இருவருமே இந்தியராக இருந்தாலோ மட்டுமே பிறப்பின் வழியே இந்திய குடியுரிமையைக் கோர முடியும் என்று சட்டம் விவரிக்கிறது.
ஆவணங்கள்
குடியுரிமையை நிரூபிக்க உங்களிடம் இருக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?
அமெரிக்கா போன்ற நாடுகளில் பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான இறுதி சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் வேளையில், இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி ஒற்றை உலகளாவிய குடியுரிமை அட்டை என்று எதுவும் தனியாக இல்லை. எனவே, ஒரு நபர் தனது குடியுரிமையைச் சட்டப்பூர்வமாக நிரூபிக்கத் தனது வம்சாவளி மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் பல்வேறு ஆவணங்களின் கூட்டுத் தொகுப்பை சமர்ப்பிக்க வேண்டும். இதில் உங்களது மற்றும் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் முறையான பதிவுச் சான்றிதழ்கள் ஆகியவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.