LOADING...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் தொடக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் தொடக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2026
03:52 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் நான்கு வாரங்கள் நீடிக்கவுள்ள இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் ஆக்ரோஷமான எதிர்க்கட்சிகளின் வியூகங்கள் காரணமாக, இந்த கூட்டத்தொடர் கடுமையான விவாதங்களும் அரசியல் மோதல்களும் நிறைந்ததாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

அதிருப்தி எம்பிக்கள்

அதிருப்தி எம்பிக்கள் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியை சேர்ந்த 20 அதிருப்தி எம்பிக்கள் மற்றும் சிவசேனா (UBT) கட்சியை சேர்ந்த 6 அதிருப்தி எம்பிக்கள் தங்களை ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவோடு இணைத்து கொள்வதாக அறிவித்த விவகாரத்தில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இறுதி முடிவு எடுக்க உள்ளார். மேலும், இவர்களின் நாடாளுமன்ற அமர்வு இடங்கள் குறித்தும் சபாநாயகர் தீர்மானிக்கவுள்ளார்.

2 மசோதாக்கள்

மோடி அரசின் 2 முக்கிய அரசியல் சாசன திருத்த மசோதாக்கள்

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நெருங்கியுள்ள ஆளும் NDA அரசு, இந்த கூட்டத்தொடரில் மிக முக்கியமான இரண்டு அரசியல் சாசன திருத்த மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. 131-வது அரசியல் சாசன திருத்த மசோதா: மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான இந்த மசோதா புதிய திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்படலாம். இதில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 50% வரை உயர்த்துவதற்கான வழிவகை சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 130-வது அரசியல் சாசன திருத்த மசோதா: பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ஏதேனும் வழக்கில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்கள் தங்களின் பதவியை காலி செய்ய வேண்டும் என்ற கடுமையான விதிமுறை இதில் முன்மொழியப்படலாம்.

Advertisement

மற்றவை

அரசை துளைக்க காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்

மேலும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கான குழுவின் காலநீட்டிப்பு, எஃப்சிஆர்ஏ (FCRA) சட்டத் திருத்தங்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், மற்றும் கார்ப்பரேட் சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றவும் அரசு தயாராகி வருகிறது. மறுபுறம், போதிய பருவமழை பெய்யாததால் ஏற்பட்டுள்ள வறட்சி, சில மாநிலங்களில் வெள்ள பாதிப்புகள், நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், ராமர் கோவில் காணிக்கை திருட்டு புகார், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்து அரசை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Advertisement