பட்டியலின பெண் பள்ளியில் காலை உணவை சமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் துவக்கிவைத்தார். அதன்படி, கரூர், அரவக்குறிச்சி பகுதியருகே வேலன்செட்டியூர் ஊராட்சி அரசு துவக்கப்பள்ளியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள பட்சத்தில், அங்கு தினந்தோறும் சமையல் செய்ய மகளிர் சுயஉதவி குழுவினை சேர்ந்த சுமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பட்டியலின சமூகத்தினை சேர்ந்த பெண்மணி என்று கூறப்படுகிறது. இதனிடையே, அப்பெண் சமைக்கக்கூடாது, அப்படி சமைத்தால் தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என சில பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 15 குழந்தைகள் தொடர்ந்து காலை உணவினை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தன்னார்வலர் ராஜகோபாலும், தோழர்கள் களஅமைப்பினை சேர்ந்தோரும் இதுகுறித்து ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதன்பேரில் ஆட்சியர் பிரபுசங்கரும், மாவட்டக்கல்வி அலுவலர்களும் பள்ளிக்குச்சென்று ஆய்வுச்செய்துள்ளனர்.
எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களுக்கு அறிவுரை கூறிய ஆட்சியர்
அதன் பின்னர் சுமதி சமைத்த உணவை சாப்பிட்ட ஆட்சியர் ஜெய்சங்கர், பெற்றோர்களை அழைத்து மாணவர்கள் மத்தியில் ஆட்சியரும், அலுவலர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருவர், அருந்ததியர் இன பெண் சமைத்தால் தனது குழந்தை உண்ணாது என்றும், இல்லையேல் மாற்று சான்றிதழ் பெற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனால் கோபமுற்ற ஆட்சியர் எதிர்ப்பு தெரிவித்த பாலசுப்ரமணியம் என்னும் பெற்றோர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்நிலையம் அழைத்து செல்லுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து மன்னிப்பு கோரிய பாலசுப்ரமணியம், தனது குழந்தை பள்ளி உணவினை சாப்பிட ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து, அங்கிருந்த மற்ற பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை விடுத்த ஆட்சியர், பள்ளிகளில் எவ்வித பாகுபாடும் இருக்க கூடாது என்று அறிவுரையும் வழங்கினார்.