
26/11 தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அழுத்தம் தந்தது: ப.சிதம்பரம்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு பாகிஸ்தானுக்கு எதிராகப் பழிவாங்கும் இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க முடிவு செய்தது ஏன் என்பதை தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குப் பிறகு தகுந்த பழிவாங்கல் தரவேண்டும் என தன் மனதில் தோன்றியது என்றும் சிதம்பரம் ஒப்புக்கொண்டார். சிதம்பரம், 175 உயிர்களை பலி கொண்ட இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அழுத்தம்
தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவிற்கு வந்த சர்வதேச அழுத்தம்
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களுக்குப் பிறகு, அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த காண்டலீசா ரைஸ் டெல்லிக்கு வந்து, "தயவுசெய்து எதிர்வினையாற்ற வேண்டாம்" என்று அப்போதைய பிரதமர் மற்றும் தன்னையும் சந்தித்து கூறியதாக தெரிவித்தார். "உலகம் முழுவதிலுமிருந்து 'போரைத் தொடங்க வேண்டாம்' என்று அழுத்தம் டெல்லியின் மீது விழுந்தது," என்று அவர் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து, இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய வெளியுறவுச் சேவை (IFS) ஆகியவற்றின் செல்வாக்கின் கீழ், அந்தச் சூழ்நிலைக்கு 'உடல் ரீதியாக எதிர்வினையாற்றக்கூடாது' என்ற முடிவு எடுக்கப்பட்டது என்று சிதம்பரம் நினைவு கூர்ந்தார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றவர்களுடன் இது விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
விமர்சனம்
பாஜகவின் கடுமையான விமர்சனம்
மூத்த காங்கிரஸ் தலைவர் பி. சிதம்பரத்தின் இந்தக் கருத்துக்கள் பாஜக தலைவர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளன. BJP மூத்த தலைவர் பிரகலாத் ஜோஷி "மும்பை தாக்குதல்கள் வெளிநாட்டு சக்திகளின் அழுத்தம் காரணமாக தவறாகக் கையாளப்பட்டன என்பதை தாமதமாக ஒப்புக்கொண்டதாக" கூறினார். "தாக்குதலைத் தொடர்ந்து உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்க சிதம்பரம் ஆரம்பத்தில் தயங்கினார் என்றும், அவர் இராணுவ நடவடிக்கை எடுக்க விரும்பினாலும், மற்றவர்கள் வெற்றி பெற்றனர்" என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா குற்றம் சாட்டினார். சோனியா காந்தி அல்லது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்த நடவடிக்கையைத் தடுத்தார்களா என்று அவர் கேள்வி எழுப்பினார், மேலும் UPA அரசாங்கம் காண்டலீசா ரைஸின் செல்வாக்கின் கீழ் செயல்பட்டதாகத் தெரிகிறது என்றும் கூறினார்.